என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Monday, June 23, 2014

வலி..

தாங்க முடியாத சுமையொன்றை
இதயம் எதிர்கொள்வதாய்
வலி..

நாட்கள் எல்லாம்
யுகங்கள் போல் மாறிடுமோ
என்ற தவிப்பு

ஒரு சின்ன அன்பு
இத்தனைக் கண்ணீர்த் துளியை
வருவிக்கும் என்பது
ஆச்சரியம்தான்!

அருகேயற்ற நிமிடங்கள் இனி
எப்படித்தான் கழியப் போகின்றதோ
நானறியேன்..

செல்லக் குறும்புகளும்
சின்னச் சிரிப்பும்
பொய்க் கோபங்களும் பார்க்காமல்
நான் கிட்டத்தட்ட
செத்துப் போய்விட மாட்டேனா?

வெளிக்காட்டவும் தெரியாமல்
அன்புகாட்டவும் தெரியாமல்
ஒதுங்கி நிற்கவும் முடியாமல்
ஒட்டி நிற்கவும் முடியாமல்..

எனக்குள் மட்டும்தான்
இத்தனை உணர்வுகளும்
உள்வாங்கப் பட்டிருக்கின்றதா?

எதிர்திசையில் இதுபோன்ற
எந்தவித சலனங்களும்
இல்லாதிருத்தல் முடியுமா?

மெலிதான நேசம்

உள்ளத்தில் தோன்றும்
தா(க்)கத்தை
போக்கும் வழி என்னவோ?
நெஞ்சில் தோன்றும் துன்பத்தை
தீர்க்கும் வழி என்னவோ?

தண்ணீர் இல்லாத காட்டுக்குள்
தயக்கமின்றி செல்லுவதா?
சாத்தான்கள் இருக்குமிடத்தில்
சத்தியத்தை வெல்லுவதா?

மனசில் எரியும் அக்கினித் தீ
மார்பு வலிக்கச் செய்கிறது..
ஆறுதலுக்கு ஆட்களின்றி
அழுகை வந்து கொல்கிறது!

பாசத்துக்கும் பொறாமைக்கும்
வித்தியாசம் தெரிகிறது..
பாசம் என்பதன் வெள்ளை நிறம்
இப்போது எனக்கு புரிகிறது!

ஆதலால்

அன்பு என்பதன் ஆழ வேர்
அடி மனசில் வளர்கிறது..
மிக மெல்லிய நேசமொன்று
எனக்குள்ளே மலர்கிறது!

எனைப் பிடித்த சோகமெல்லாம்
மெதுமெதுவாய் தேய்கிறது..
அலையடித்த சந்தேகங்கள்
அடியோடு ஓய்கிறது!!!

எரிக்கும் சுவாசம்

உண்மையையும்
உதாசீனத்தையும்
புரிய வைத்ததே நீ தானே..
அப்படியிருக்க
துகள்துகளாக
இதயக் கண்ணாடியை உடைத்துவிட்டு
இப்போது
அது தெளிவாக இல்லை
என்பது ஞாயமா?

பாசத்தை மட்டுமே
பகிரத் தெரிந்த என்னால்
பாசாங்கு பண்ணத்தெரியாது
என்ற உண்மையை அறிந்த பின்பும்
குறை சொல்தல் ஞாயமா?

உயிர்மூச்சின் துளிகளில் எல்லாம்
உனக்கான சுவாசித்தலை செய்த போது
உள்ளுணர்வேயின்றி
உன் அகங்காரத்தை காட்டியது ஞாயமா?

உனக்காக எதையும்
விட்டுக்கொடுக்கத் தயார் என்று நானிருந்தபோது
எதற்காகவும் என்னை இழக்க நீ
தயாராயிருந்தது மட்டும் ஞாயமா?

என் இதயத்தை
உன் விழியிடம் ஒப்படைத்துவிட்டு
சந்தோஷித்திருந்தபோது
அதைப் புழுவாக
சுடுமணலில் இட்டு வதைத்தது ஞாயமா?

இப்போது மட்டுமென்ன
உன் வார்த்தைகளாலும் செய்கையினாலும்
தண்ணீர் வற்றச்செய்த
என் மன நதியில்
நீச்சலடிக்க நீ நினைப்பது
ஞாயமா?