என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Monday, January 7, 2013


'விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிறுவர் இலக்கிய படைப்பாளிகள் இருக்கின்றார்கள்'


'கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபவர்கள் சிறுவர்களுக்கான தேடலை அதிகரிக்கும் விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. அதிக கரிசனை காட்டுவதில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிறுவர் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகள் காணப்படுகின்றார்கள். எனவே எதிர்காலத்தில் இது தொடர்பான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவுரைகள் தரப்படுமேயானால் அதிகமான சிறுவர் இல்க்கிய படைப்பாளிகளை காணமுடியும்' என்கிறார்  தியத்தலாவ எச்.எப்.றிஸ்னா.

பத்திரிகையொன்றிற்கு அனுப்பிய கவிதை இவரது பெயருடன் பிரசுரமாகியதை தொடர்ந்து தனது எழுத்துப்பணியை ஆரம்பித்த இவர் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கிய படைப்பாளி என தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

'இன்னும் உன் குரல்' கேட்கிறது என்ற எனது கவிதை தொகுதியையும் 'வைகறை' என்ற சிறுகதை தொகுதியையும் இரு சிறுவர் இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ள இவர் இன்னும் 3 சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை, 'மழையில் நனையும் மனசு' (கவிதைத் தொகுதி), 'திறந்த கதவுள் தெரிந்தவை' (விமர்சனத் தொகுதி) ஆகியவையும் வெளிவரவுள்ள நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திறமையை வெளிபடுத்த பல இலக்கிய போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர்  பணப்பரிசில்களையும் பாராட்டுதல்களையும் தனது திறமையின் வெளிப்பாடாக பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரை தமிழ் மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்டபோது அவர் பகிர்ந்துகொண்டவை,


கேள்வி: உங்களது எழுத்து துறையின் ஆரம்ப காலம் குறித்து கூறமுடியுமா? 


பதில்:- 'காத்திருப்பு' என்ற கவிதை 2004ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் வெளிவந்ததை தொடர்ந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தேன். அதன்பிறகு பல பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு ஆக்கங்களை எழுதி அனுப்பினேன். அவை வெகுகாலம் செல்லுமுன்னே பிரசுரமாகியதில் வந்த உற்சாகம் மேலும் என்னை எழுதத் தூண்டியது உண்மையே.

எனினும் ஆரம்பத்தில் கவிதைத் துறையில் மட்டும் கால் வைத்த நான் தற்போது சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றேன். இதற்கு சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதுதான் காரணம்.

அவர் எனக்கு அளித்த ஊக்கங்கள், நல்ல ஆலோசனைகளே என்னை இலக்கிய செயற்பாடுகளில் அதிக கரிசனையுடனும் முனைப்புடனும் செயற்படுவதற்கு உந்துதலளித்தது.  அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் விசேட நன்றிகளை கூறிக்கொள்கிறேன். அதே சந்தர்ப்பத்தில் என்னையும், எனது எழுத்தையும் தட்டிக்கொடுத்து உற்சாகமளித்த எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

கேள்வி:- கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் இவற்றை தவிர்ந்து வேறு எந்த துறைகளில் அதிக ஆர்வம் காணப்படுகின்றது?

பதில்:- மேற்குறிப்பிட்ட துறைகளில் எனக்கு அதிக ஆர்வம் காணப்பட்டபோதிலும் எதிர்காலத்தில் நாவல் துறையில் காலடி எடுத்து வைக்க எண்ணியிருக்கிறேன். அதனூடாகவும் எனது இலக்கியப் பணியை மென்மேலும் கொண்டுசெல்ல உத்தேசமிருக்கிறது. ஏனெனில் கவிதை, சிறுகதை என்பவற்றில் மட்டுப்படுத்தி அல்லது கட்டுப்படுத்தி எழுதும் பல விடயங்களை நாவலில் விரிவாக ஆராய்ந்து சொல்லக்கூடியதாக இருக்கிறது. எனவே அதுகுறித்த முயற்சிகளில் எதிர்காலத்தில் ஈடுபடும் எண்ணம் எனக்கிருக்கிறது.

கேள்வி:- சிறுவர் இலக்கியம்  மீதான ஆர்வம் எழுந்தமை பற்றி கூறமுடியுமா?

பதில்:- உண்மையில் சொல்வதென்றால் ஆரம்பத்தில் சிறுவர் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தபோதிலும் அதை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கான வழிவகைகளை நான் அறிந்திருக்கவில்லை. எவ்வாறான விடயங்கள் சிறுவர் இலக்கியத்தில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும், எவை தவிர்க்கப்பட வேண்டும் போன்ற அடிப்படையான விடயங்களில் தெளிவிருக்கவில்லை.

அப்படியிருக்கும்போது எமது இஷ்டத்துக்கு சிறுவர்களுக்கான படைப்புக்களை படைக்க முடியாதல்லவா? சிறுவர்களின் மனதில் பதியக்கூடிய, அவர்களை வழிநடத்தக் கூடிய விடயங்களைத்தான் நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த வகையில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்த திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுக்கும் அச்சந்தர்ப்பத்தை நான் சரியாக பயன்படுத்திக்கொள்ள உறுதுணையாயிருந்த சகோதரி சுரேகா தம்பிதுரை அவர்களுக்கும் (ரூம்டுரீட் நிறுவனம்) இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கேள்வி:- சிறுவர் இலக்கியங்களை படைக்கும்போது எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றீர்கள்?


பதில்:- ஏனைய துறைகளில் படைப்புக்களைப் படைக்கும்போது சம வயது படைப்பாளிகள், அல்லது வயதில் மூத்தோர் அவற்றை வாசிக்கிறார்கள். அதில் பொதுவாக எதுவித சங்கடங்களும் ஏற்படுவதில்லை. எனினும் சிறுவர் இலக்கியத்தை பொறுத்தமட்டில் சிறுவர்களில் தரத்துக்கு நாம் இறங்கி, கிட்டத்தட்ட சிறுவர்களாக மாறியே அவற்றை எழுத வேண்டியிருக்கிறது. சின்னச்சின்ன விடயங்களிலும் நுணுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. காரணம் சிறுவர்களுக்கு ஒரு விடயத்தைக் கற்றுக்கொடுக்கிறோம் என்றால் அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும். சிலந்திக்கு எத்தனைக் கால்கள், நண்டுக்கு எத்தனைக் கால்கள் போன்ற விடயங்களில் கூட அவதானமாக இருந்து சரியாக எழுத வேண்டும்.

கேள்வி:- இலங்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி கூறமுடியுமா?

பதில்:- இலங்கையில் சிறுவர் இலக்கியத்துறை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை என்பதே எனது கருத்து. ஏனெனில் கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபவர்கள் சிறுவர்களுக்கான தேடலை அதிகரிக்கும் விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில் அதிக கரிசனை காட்டுவதில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிறுவர் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகள் காணப்படுகின்றார்கள். எனவே எதிர்காலத்தில் இது சம்பந்தமான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு, அறிவுரைகள் தரப்படுமேயானால் இன்னும் பல சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் உருவாவதற்கு ஏதுவாக அமையும்.

கேள்வி:- போட்டி மிகுந்த சூழலில் உங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் எழுத்துத் துறையில் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:- தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக என்று நான் எந்தவித முயற்சிகளையும் பிரத்தியேகமாக மேற்கொள்வதில்லை. எனினும் என்னுடைய எழுத்துப்பாணி எனது கவிதைகளை இலகுவாக இனங்காணச் செய்வதாக பலர் கூறியிருக்கிறார்கள். எதுகை, மோனை, சந்தம் என்பவற்றில் அதிக கரிசனை காட்டி எழுதி வருவதுண்டு. அதுபோல சிறுகதைகளில் என் கற்பனைக் கதைகளும், கண்ட, கேட்ட அனுபவங்களை வைத்து எழுதியவைகளும் இருக்கின்ற அதேவேளை புத்தகங்களுக்காக நான் எழுதும் இரசனைக் குறிப்புக்களில் எழுத்தாளர்களை வீழ்த்தக்கூடிய குறைப்பாடுகளை குறிப்பிடுவதில்லை. அக் குறைபாடுகளைத் தனிப்பட்ட முறையில்தான் அந்தந்த நூலாசிரியர்களுக்கு தெரிவிக்கின்றேன். 

நாங்கள் காலத்துக்கு எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் காலம் நமக்கு திருப்பித் தருகிறது. என்னாலான விடயங்களை நான் எழுதினேன். இன்று ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளர் சூழவில் நானும் இருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


கேள்வி:- இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துகொண்டு எழுத்து துறையில் நிற்பதில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றீர்கள்?


பதில்:- நிச்சயமாக மார்க்கம் கல்விக்கு தடையில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துகொண்டு, இஸ்லாமிய வட்டத்தைவிட்டு வெளியேறாமல் நாம் இலக்கிய முயற்சிகளை மேற்கொள்வதில் எந்தப் பிரிச்னையும் வந்துவிடப் போவதில்லை. ஏனெனில் இலக்கியம் என்பது ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு பாலம். இவ்வாறானதொரு துறைக்கு இஸ்லாம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை.

கேள்வி:- புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதைப்
பற்றிய உங்களது கருத்து?


பதில்:- எழுதிய படைப்புக்கள் அழிந்து போகாமல் இருப்பதற்காக புத்தகம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், புத்தகம் போடுவதற்காக எழுதுவது என்பதை புறந்தள்ளவும் முடியாது. ஏனெனில் எழுதுபவர்களால்தான் புத்தகம்  வெளியிட முடியுமாக இருக்கிறது. இன்றைய காலத்தின் தேவைகள், பொருளாதார சுமைகள் என்பவற்றை வைத்துப் பார்த்தால் ஒருசிலருக்கு எழுத்து தானே தொழிலாக இருக்கிறது. அவ்வாறானவர்களின் இந்த முயற்சி பிழையாக எனக்குப் படவில்லை.

கேள்வி:- தொழில்நுட்ப வளர்ச்சி எழுத்து துறையின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமையும் அதேவேளை, அதுவே அதனது வீழ்ச்சிக்கும் வழிசெய்வதாக அமைகின்றது இதை பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சி என்று நோக்கினால் ஆக்கங்களை தட்டச்சு செய்துகொள்வது முதல் அதனை பதிப்புக்கு கொடுப்பது வரை பெரும்பாலும் எழுத்தாளர்களே தங்களது வேலைகளை செய்து முடிக்கிறார்கள். நேரச்செலவு, காசுச் செலவு மிச்சமாகிறது. இது தவிர இன்னொரு பக்கம் இணையம், பேஸ்புக் என்று தொழில்நுட்பம் அசுர வேகத்தில் முன்னேறியிருக்கிறது.

எவ்வளவுதான் தொழில்நுட்பம் முன்னேறினாலும் அதை பயன்படுத்தி நல்ல விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாத சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மற்றவர்களில் தனிப்பட்ட விடயங்களில் தமது நேரகாலத்தை வீணாக்கி, மனித நேயத்தை மறந்து ஏணையவர்களுக்கு மனக்கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றமை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. விதைப்பதைத் தான் அறுவடை செய்ய முடியும். அதனால் நல்லதை விதைத்தால் நல்லதைப் பெறலாம். தீயதை விதைத்தால் தீயதைப் பெறலாம். ஆகவே நேர்மையாக நடந்துகொள்வது அணைவருக்கும் நன்மை பயக்கும்.


கேள்வி:-இலக்கிய உலகுக்கு உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்?

பதில்:- நானும் சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களும் இணைந்து பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகையை நடாத்தி வருகின்றோம். இதுவரை 10 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழிலும் பெண் எழுத்தாளர்களை கௌரவிக்குமுகமாக அவர்களது புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து நேர்காணல் செய்து வருகிறோம். அதேபோல புதிய எழுத்தாளர்களுக்கு களம் கொடுத்து அவர்களையும் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறோம்.

நேர்காணல்- க.கோகிலவாணி
http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/kalaigarkal/52499-2012-11-11-10-31-26.html