என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, December 14, 2012

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்கள்


01. ஹஜ் பெருநாள் இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்

பல்லவி

இன்பங்கள் பொங்கும்
இரு பெருநாளிலே....
தியாகத்தை அறிந்தோம் - ஹஜ்
திருநாளிலே!

இறை ஆணையை நிறைவேற்றிய
இப்றாஹீமே – அவர்
திருமகனாய் வந்துதித்த
இஸ்மாயிலே! (II)

அனு பல்லவி

பாலைவன பூமியிலே – உம்
பாதம் பட்ட சோலையிலே
காலை மாலை வேளையிலே
ஹஜ் கடமை செய்வர் ஹாஜிகளே

உழ்ஹிய்யா வழக்கம் தந்த
வரலாறு இது..

தியாகத்தின் மகிமை சொன்ன
நன்னாள் இது..

பொன் நாள் இது (II)

சரணம் - 01

கனவுகளில் நபி இப்றாஹீம் கண்டார்
மகன் இஸ்மாயிலை பலியிடவே...
இணையற்றோன் நாட்டம் என உணர்ந்தே
இறுதியில் அதை நிறைவேற்றவே...

ஹாஜரா அம்மையாரை
அழைத்தார்கள்..
தன் கனவு பற்றி அவரிடமே
உரைத்தார்கள்!

வல்லோனின் ஆணையை உணர்ந்தாரே
அன்னை உணர்ந்தாரே
அன்னை உணர்ந்தாரே!!

சரணம் - 02

இஸ்மாயில் நபி சாந்த சிரிப்புடன்;
இறைவன் நாட்டமே நடக்கும் என்றார்..
கத்தி கழுத்தை அறுக்காமல் போக
பாறையில் எறிந்தாரே இப்றாஹிம் நபி!

பாறை இரண்டாய்
சிதறியது..
அல்லாஹ்வின் வஹி அங்கு
இறங்கியது!

சுவனத்து ஆட்டை அறுப்பீரே
குர்பான் கொடுப்பீரே
குர்பான் கொடுப்பீரே!!


02. ஒளி விளக்காய் வந்தார் நபி நாதரே (மெல்லிசைப் பாடல்)


(பல்லவி)

ஒளி விளக்காய் வந்தார்
நபி நாதரே – அவர்
புகழ் பாட வந்தோம்
புவி மீதிலே! (ii)


(அனு பல்லவி)

அவர்தான் எங்கள் தேன் நபி
சொல்வோம் ஸலவாத்தை
உலகம் செழிக்கும் மழையானார்
உண்மை இவ்வார்த்தை (ii)


(சரணம் 01)

மிஃராஜ் இரவினிலே
அல்லாஹ்வைத் தரிசித்தே
ஐநேர தொழுகையை
பெற்றுத் தந்தார்

தந்தைக்கும் அன்னைக்கும்
கீழ்படியும் மக்களாய்
நாம் ஆதல் சிறப்பென்று
கற்றுத் தந்தார் (ஒளி விளக்காய்)


(சரணம் 02)

மதுவென்றும் மாதுவென்றும்
மாயங்களில் மூழ்கிய
அறியாமை மாந்தர்க்கு
வழிகாட்டினார்

குடியென்றும் சூது என்றும்
சூழ்ச்சிகளில் வாழ்ந்திட்ட
ஜாஹிலிய்ய மக்களுக்கு
தெளிவூட்டினார் (ஒளி விளக்காய்)