என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, September 24, 2011

கறுப்பு மாதம்





வர்ணத்தில் கறுப்பென்றால்
பலருக்கும் பிடிப்பில்லை..
மாதத்தில் கறுப்புண்டு
அறிந்தவர்கள் பலரில்லை!

வடபுலத்து முஸ்லிம்கள்
படபடத்த நாளொன்று..
வருகின்ற அக்டோபர்
வருடங்கள் இருபத்தொன்று!

தீயவை அழித்துவிடல்
மனிதகுல தர்மம் தான்..
இனமொன்றை துடைத்தழித்தால்
அதற்கு பெயர் வனமம் தான்!

சொத்துக்கள் சொந்தங்கள்
பலிகொடுத்தோர் ஏராளம்..
இனி வாழ்வில் எமக்கெல்லாம்
இசைக்கலாமா பூபாளம்?

ஒக்டோபர் மாதமிங்கு
கறுப்பாக ஆயிற்று..
ஒட்டுமொத்த வாழ்க்கையும்
இருட்டாகிப் போயிற்று!

அந்திவான பறவைகள்
முகாரிராகம் பாடியது..
சந்தோஷம் எமைவிட்டு
தொலைதூரம் ஓடியது!

எமை அறிந்தோர் எமக்காக
இப்போது யாரங்கே?
மண் அலைந்து விளையாடிய
எங்களது ஊர் எங்கே?

தாய் தந்தை நாமெல்லாம்
மகிழ்ந்திருந்த வீடெங்கே?
பால் தந்து எமக்குதவிய
என் வீட்டு ஆடெங்கே?

அநாதையாய் நாமெல்லாம்
அடிபட்டு இருக்கையிலே..
அவர்களங்கு சொகுசாக
அமர்ந்திருந்தார் `இருக்கையிலே'

தாய்நாட்டில் எம் உரிமை
மொத்தமாக குறைந்ததுவே..
நாய் கூட எமைப்பார்த்து
ஏளனமாய் குரைத்ததுவே!

சோகங்கள் துயரங்கள்
சொந்தமாய் மாறியது..
தென்றல் இனி இல்லையென
அனல் காற்று கூறியது!

எதையும்தான் பாராமல்
துரத்தப்படடு வந்த துயர்..
சுட்டாலும் அழியாது
போகும் வரை எமது உயிர்!!!