என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, December 17, 2010

நீ வாழ்வது மேல்!

கற்றவரை இவ்வுலகம்
போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும்..
வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை
வாழவைக்கும் வழிநிலையை
நித்தியமாய் காட்டும்...
அதை அறிந்து தான் வாழ்த்துது
இளம் காற்றும்!

நேர்மையாய் உன்வாழ்வை
வாழு - பிறர் கவலையை
காது கொடுத்து கேளு..
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலே
அயராது அவருக்காய் மாளு..
தரணியிலே நீ வாழ்வது மேலு!

கவலையின்றி வாழ்பவன் தான்
யாரு - சிலரின் கண்ணிரண்டும்
குருடு நீ பாரு...
நம்பிக்கை இழக்காமல்
நாணயம் தவறாமல்
இலட்சியத்தை நோக்கி
நீ ஏறு..
அதை விட இன்பம் என்ன வேறு?

நடுவீதியில் பெண்ணை
மறியாதே - அவளுன் மனைவியாகலாம்
அது தெரியாதே..
தீயஎண்ணங்கள் பலகொண்டு
தவறுகள் பல செய்து
வாழ்க்கையில் நீயும் சரியாதே - பின்
பைத்தியமாய் வீதியில் திரியாதே!

அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக்காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு...
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!!!

Thursday, December 2, 2010

மரணத்தின் தேதி!

இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!

சுட்டெரிக்கும் சூரியன்
என் தோழனாய் மாறும்!
என் நிலை கண்டுதான்
கலங்கி நீளும் ஆறும்!

வீணை தடவிய விரல்களெல்லாம்
கண்ணைக்குத்தி நிற்கும்..
வானைத்தொடும் கவலைகள்
முட்டும் எட்டுத்திக்கும்!

பட்ட பகல் வெட்ட வெயில்
துன்பமில்லை எனக்கு - கை
தொட்ட அவள் வெப்பம்நெஞ்சில்
பத்திரமாய் இருக்கு!

ஏமாற்றம் வலியெல்லாம்
எனக்குள்ளே மோதி..
சீக்கிரமாய் நிர்ணயிக்கும்
என் மரணத்தின் தேதி!!!

இன்பமின்றி வேறு இனி ஏது!



கொத்துமலர் பூப்பறிக்க
உன் இதழில் தேன் தெறிக்க
அத்தை மகள் நீ வந்து நின்றாய்..
அடியே - இத்தனை நாள் பத்திரமாய்
பொத்தி வைத்த என் மனசை
பார்வையாலே முழுவதுமாய் தின்றாய்!

அருவிக்கு போகையிலே
ஆத்தங்கரை ஓரத்திலே
குடத்துடனே நீயுந்தான் இருந்தாய்..
குயிலே - குடத்தைப் போல என் உள்ளம்
தளும்பித் தளும்பித்துடிக்கையிலே
குருவியாக நீ பறந்து சென்றாய்!

மான் விழியால் எனைமாற்றி
தேன் மொழியால் எனை பேசி
மயக்கிட்ட ரத்தினமே நீ தான்..
அன்று - மலர்மாலை சூடுகையில்
வெக்கப்பட்டு சிணுங்கிச் சிரித்து
பற்றிக்கொள்ளச்செய்தாய் என்னில் தீ தான்!

அன்பகலா ப்ரியமுடன்
சோதி நிலா நீயிருக்க
மரணத்தின் பயமிருக்காது..
நாங்கள் - மாதெமெல்லாம் மகிழ்வுடனே
பேதமின்றி வாழ்வதாலே
இன்பமின்றி வேறு இனி ஏது???

கடல் கொண்டு போகட்டும்!

பத்துரூபா கேட்டவளை
'பரதேசி' என்றவனில்
பண்பென்று என்ன இருக்க முடியும்?
அவள் பசி போக்க கேட்டிருப்பாள்
என்று மனம் சொல்லுகையில்
இருதயம் சுக்குநூறாய் ஒடியும்!

நாகரீகம் மறந்தவனை
நாய் கூட மதிக்காது
நங்கையர் சொல்லித்தானா விளங்கும்?
பாவம்..
பலிசொல்லை ஏற்காமல்
பாவையரை வதைப்பவனை
படைத்தவனே தண்டிப்பான் சுணங்கும்!

விதி செய்த சதியினிலே
விலைபோகும் மாதுகளை
எப்படி நாம் காப்பாற்ற இயலும்?
வெறும் பணத்துக்காய்
ஆசைப்பட்டு வீணாகும் சிலபேரை
மொத்தமாக அள்ளி செல்லும் புயலும்!

அகதியாக மாற்றப்பட்டு
அகம் நொந்து வாழ்வோரை
அரவணைக்கும் நாள் என்று வருமோ?
தொலைந்து போன சொந்தங்களை
தொலைவில் சென்று தேடினாலும்
இனியவர்களை மீட்டித்தான் தருமோ?

போலியாக பழகியதும்
அன்பென்று நடித்ததுவும்
ஒருநாளில்
உணர்வு கிழித்து வதைக்கும்..
அன்று..
பேராசைப் பட்டதாலே
மனிதமின்றி வாழ்ந்த வாழ்க்கை
அணுவணுவாய்
உயிரையே சிதைக்கும்!

இனத்துவேசம் அறியாத
இலங்கைத்தாய் பெற்ற எமை
பிரித்திட்ட பூதமே நீ அழிக..
உனை என்றென்றும் கூர்வாளால்
ஒழித்திடுமே எம் கைகள்
ஒற்றுமையே உன் பாதம் பதிக!

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின்
அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படி தான் வந்ததென்றால்
கடல்பொங்கி
எல்லாம் கொண்டு போகட்டும்!!!