என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, November 27, 2010

தீன் வழியை காட்டி நில்!

வான்மறையின் வசனங்களில்
தேன் உரையை உணர்ந்தாயா?
உளக்கறையை நீக்குமதன்
உன்னதம் நீ அறிந்தாயா?

நபிபெருமான் காட்டித்தந்த
சுன்னாக்கள் தொகுத்தாயா?
தினம் அதைநீ கடைபிடிக்க
அட்டவணையாய் வகுத்தாயா?

பாவங்கள் செய்வோரை
பாதையிலே கண்டாலும்
பக்குவமாய் எடுத்துச்சொல்
பதறாதே ஒருநாளும்!

தீ நாக்கால் சுட்டிடாமல்
தேள் வார்த்தை கொட்டிடாமல்
தனியாக அழைத்துச்செல்
இனிதாக அவன்பிழை சொல்!

தீராமல் தொடர்ந்திங்கே
தீமைகள் செய்தாலும்
தீஞ்சுவையாய் உணர்வதற்கு
தீன் வழியை காட்டி நில்!!!

Wednesday, November 24, 2010

ஒட்டடை நினைவுகள்!

இன்னதென்ற
காரணம் தெரியாமலேயே
வலியெடுக்கிறது
எனது இடது புறத்தில்!

உலகத்திலுள்ள
அனைத்து கவலைகளும்
என்னில் தேங்கியிருக்கிற
மெய் நிலை!

என்னென்வோ
நினைத்துப் பார்த்த
பொழுதிலும்
எதிலும் சிக்காமல்
கைநழுவிச் செல்லும்
அந்த
ஒட்டடை நினைவுகள்!

குளவி கொட்டிப்போன
வேதனையின் சாயலிலும்
பாலைவன மணலின் கொதிப்பிலும்
துயர்களை தருவிக்கிறது
இருதயம்!

Friday, November 12, 2010

சாத்தான் ஆடும் ஆட்டம்!

கனவுகளின் தேசத்தில்
தனியே நீளமாய் பயணிக்கின்றன
அர்த்தமற்ற அங்கலாய்புகள்!

சுவடுகள் அழிந்த
நேற்றைய பொழுதுகளுக்காய்
அழுது வடிகின்ற
நிகழ்கால வடுக்கள்!

பயங்கரமாய் ஊளையிடும்
நரிகளின் அர்த்த ராத்திரியில்
பிதுங்கி வழிகின்றன
என் அச்சங்கள்!

சாத்தான்
ஆடுகிற ஆட்டத்தில்
தாயக்கட்டைகளாய் மாறி
புரட்டிப்போடப்படுகின்றன
இறுதி மூச்சின் விசும்பல்கள்!!!

இரவிடம் மீள்கிறேன்!

இடம்பெயரவியலா
சமநிலை மாற்றத்தால்
சாமான்ய உணர்வுகளிலும்
சீற்றத்தணல் தெறித்தபடி!

ஒவ்வொரு நாட்களிலும்
நிம்மதியான இடம் தேடி
கால் வலிக்க என்
உயிரும் நடந்தபடி!

மழைக்கு முகவரி கேட்கும்
மனசாட்சி எரிந்தவர்களின்
கிரகத்தில் வாழ்கிறேன்!

பாலின வேறுபாடுகளறியா
பாவிகளின் போக்கு எண்ணி
சொல்லமுடியா சோகத்துடன்
இரவிடம் மீள்கிறேன்!

அரிதாரமற்ற மௌனங்களோடு
பெரிதாக நானும்
காட்டி விடாது
துன்பமாய் என் நிலை
உரைக்கிறேன்!

கேளுங்கள்...
எனை மீட்சிக்கும் வழிகளற்று
நீட்சிக்கும் துயரங்களை
சாட்சிகளின் தடயமின்றி
எல்லோரிடமும் மறைக்கிறேன்!!!