என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, July 14, 2010

ஈமானியக்கொடி!



என் தகுதிக்கு மீறிய கற்பனைகளில்
இதயத்தை
மூழ்க விடவில்லை...
கானலாகும் உலக இன்பங்களை
என் உள்ளம்
நாடவுமில்லை!

மரபென்ற வேலிக்குள்
கட்டுப்பட்டிருப்பதால்
மார்க்கத்தின் தீஞ்சுவையை
உணருகிறேன் நான்!

யாரப்பே...
நீ தந்த குரல்கொண்டு
யாரையும் நான்
ஈர்த்தெடுக்கவில்லை..
கண்ணிரண்டால் ஆணகளுடன்
காதலுடன் போர்தொடுக்கவில்லை!

திருட்டுத்தனமாய்
தொலைபேசவுமில்லை...
தீய ஆசைகளுக்கு
வலைவீசவுமில்லை!

ஈமானியக்கொடி
இதயக்கிளையெங்கும்
படர்கிறது...
உள்ளத்தின் களை தீரத்து
அது சந்தோஷத்தைத் தொடர்கிறது!

ஷைத்தானை விட்டு
நானிருக்கிறேன்
தொலைதூரம்...
யாஅல்லாஹ்...
நன்மையை மட்டுமே
எதிர்பார்க்கிறேன்
ஒவ்வொரு நாளும்!

உன் நாமம் கூறினால்
கவலைகள் கழிகிறது..
ரஹ்மானே...
வல்லாவனாம் உன்
ரஹ்மத்
என் வாழ்வெங்கும் பொழிகிறது!!!

Tuesday, July 13, 2010

எனது ஊரும் தலை நகரும்

அங்கு...
நான் ஓடித்திரிந்த மேட்டுநிலம்
குளிர் பூசும் காலநிலை
பசுமைமிகு பச்சை மரம்
அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!

மொட்டைமாடியமர்ந்து
கிறுக்கிய கவிதை...
மரத்தடி நிழலின் ஈரலிப்பு
பலாப்பழத்தின் வாசனை...
என் சமையலை ருசித்தவாறே
குறை கூறிய உறவுகள்..
அன்பின் உம்மா வாப்பா
சுட்டித்தம்பி
செல்லத்தங்கை!!!

இங்கு...
சுட்டெரிக்கும் சூரியன்
பச்சையம் மறந்த பொட்டல் வெளி
ஜீவிதம் கசக்கும் விடியல்கள்
வாகனங்களின் தொடர் இரைச்சல்
மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..
கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி...
நெருப்பு விலையாய் சாமான்கள்..
சுனாமி தந்த கடல் அல்லது கரை
செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!

சரிந்து போன சந்தோஷங்கள்!

எங்கள் ஊரில் கிணறு செய்து
அதில் மீன்பிடித்து
மகிழ்ந்திருந்தோம்...
நீங்களோ
அமிலத்தை அதில் ஊற்றி
அலற வைதது சிரித்தீர்கள்!

உங்களோடு இணைந்தே
வானத்தின்
நட்சத்திரம் கோர்க்க
எண்ணியிருந்தோம்...
நீங்களோ
அவற்றையே எரிகல்லாக்கி
எங்களுக்கே வலி தந்தீர்கள்!

உங்களோடு தான்
கைகோர்த்து வர
ஆசைப்பட்டோம்...
நீங்களோ
எங்கள் தோளேறி
தூரம் கணிக்கிறீர்கள்!

உங்கள்
முன்னேற்றங்களைப் பார்த்து
இதயத்தில்
சந்தோஷம் ஏற்றியிருந்தோம்...
நீங்களோ
புழுவாய் எமை கணித்து
துடிக்க வைத்தே ரசிக்கிறீர்கள்!!!

Tuesday, July 6, 2010

எனதான மடமை!

வியாபாரத்தை மட்டுமே
விதியாக்கிக்கொண்ட பின்
உன்னை மாற்ற நினைத்தது
என் மடமை தான்!

கண்ணான கணவன் என்று
காலடியில் கிடந்து நின்று
அன்பை உன்னிடம்
மன்றாடிக்கேட்டதும் மடமை தான்!

கட்டிய மனைவியை
கணக்கிலும் எடுக்காமல்
கடைக்கணக்கில் மூழ்கியே
பணத்தின் பின் அலையும் உனை
உறவென்று சொன்னதும் மடமை தான்!

பிள்ளைகளைப் பாராமல்
பிறவியுடனும் சேராமல்
பிடிவாதம் காக்கும் உனை
என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ
அழைத்ததும்
எனதே எனதான மடமை தான்!!!

மலை நாட்டிலும் சுனாமிங்க!

தேகத்தை வருத்தி
தேயில பறித்தாலும் - அதற்குரிய
பாகத்தை கேட்கையில
பலிபாவம் எமக்காகும்!

மாவு வெல அரிசி வெல
எகிறிக்கிட்டே போவுதுங்க...
காவு கொள்ளும் வறுமையை
எதிர்த்திடுதல் எப்படிங்க?

ஆயாவிடம் புள்ளைங்கள
பார்க்க சொல்லி விட்ட போதும்
தாயா நின்னு பாத்துக்குமா
இல்லேன்னாலும் என்ன செய்ய?

பெரியவனு மாசம் முழுக்க
சளி வந்து படுத்த போதும்
வறியவன்னு தெரிஞ்சதால
வைத்தியரும் பாக்கயில்ல..

லயத்து குடிசக் காம்பிராவில்
மூனு கொமருப்புள்ளயோட
பயந்து பயந்து வாழ்ந்ததிலே
பாதி வாழ்க்க போயிடிச்சி!

ரொட்டி திண்ணு வளந்த வுடல்
குப்பை தொட்டி ஆனதில
யாருக்குமே வருத்தமில்ல..
வருத்தப்பட ஒருத்தனில்ல...

கரைநாட்டில ஒருநாளு
சுனாமினு வந்திச்சிங்க...
நம்ம வாழ்வில் தினம் அதுதான்
தயவு செஞ்சி வெளங்கிக்கிங்க!

என் இதயமும் உன் பாதமும்!



காதலின்
மொத்த உருவானவளே..
இன்பங்கள ;பிரசவமாகிட
கருவானவளே...

சொற்ப கால உறவில்
சிற்பமாய் நீ எனக்குள்!

உன் மலர்பதங்களை
என் இதயம் தாங்குவதால்
நீ நடந்தாலும்
வலியிருக்காது பாரேன்!

என் கைகளோ
தூக்கத்தின் இடைவெளியிலும்
உன்னை தேடுகிறது...
நீ
இல்லாததை அறிந்து கொண்டு
மனசு கடுமையாய் வாடுகிறது!

புரிந்து கொள்!
மீண்டும் மீட்டிக்கொள்ளவே
தேவையில்லாதபடிக்கு
உன்னிடம் அடகு வைத்திருக்கிறேன்
என் மனசை..
காலம் முழுதும் காப்பாற்றித்தா!!!

தீ சுற்றிய காதல்!

மின்னல் இடி யாவும்
ஒன்று கூடி
வெட்டி முழங்கிய
அந்த இரவில்....

தனியாய் நான்
உறங்குகின்ற
யாருமற்ற நிலையில்...

என் இதயம்
வேகமாய் துடித்து ஓய
பிரயத்தனம் எடுக்கிறது!

நீ பிரிந்து போன கணத்திலிருந்து
தீ என்னை
சுற்றிக்கொண்டது...
வீணாகிய என் காதலை எண்ணி
அனைத்தும் என்னை
வெட்டித்தின்றது!

உன்மீதான என் காதலை
நீ
புரிந்திடாதபடி செல்ல...

துக்கம் தொடை அடைத்து
நாடி நரம் பு புடைத்து
நான் பட்டபாட்டை
எங்கனம் சொல்ல?

சந்திரனும் ஓய்வெடுக்க ஓர்
அமாவாசை வரும்....
என் வாழ்வு மட்டும்
மாறாமலே இருப்பது
நான் வாங்கி வந்த வரம்!!!

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா